அக்ரோமெகலி - Acromegaly in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 19, 2018

March 06, 2020

அக்ரோமெகலி
அக்ரோமெகலி

அக்ரோமெகலி என்றால் என்ன?

அக்ரோமெகலி என்பது கிரேக்க வார்த்தையிலிருந்து வந்த சொற்களாகும்; 'அக்ரோன்' என்றால் முனைப்புள்ளிகள் மற்றும் 'மெகல்’ என்றால் "பெரிய" என்றும் பொருள்படும். உடலில் அதிகப்படியான வளர்ச்சி ஹார்மோன் (ஜி.ஹெச்) சுரப்பதால், கைகள் மற்றும் கால்கள் விரிவடைந்த நிலையில் காணப்படுகின்ற அடிப்படையில் இந்த நோய் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இது நடுத்தர வயது மக்களையே பெரும்பாலும் பாதிக்கிறது, மேலும் நீண்ட நாட்களுக்கு நோயின் அறிகுறிகள் கண்டறியப்படாமல் போகலாம்.அக்ரோமெகலி ஒரு அரிய வகை நோய் என்றாலும், சரியான நேரத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்காவிட்டால், மரணத்தை விளைவிக்கக் கூடியதாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பொதுவான அறிகுறிகள்:

  • உடலில் உள்ள கைகள், கால்கள், மண்டை மற்றும் முகம் ஆகிய பகுதியின் எலும்புகள் விரிவடைவது இதன் தனிச்சிறப்பான அறிகுறிகள். இது பொதுவாக கைவிரல் மோதிரங்கள் அல்லது காலணிகள் பொருந்தாத போது ஏற்படுகிறது.
  • தாடை எலும்புகள் அளவில் பெரியதாக விரிவடைந்து, முகத்தின் மற்ற பகுதியை விட அந்த பகுதி மட்டும் பெரியதாக காணப்படும்.

பிற அறிகுறிகள்:

  • விரிவடைந்த குரல் தண்டுகளின் (வோகல் கார்ட்ஸ்) காரணமாக, நோய் தாக்கப்பட்டவரின் குரல் மெல்லியதாக மாறிவிடும்.
  • தோல்கள் தளர்வடைந்து, தடிமனாக மற்றும் எண்ணெய் பிசுப்புடன் காணப்படும்.
  • மூட்டு வலி மற்றும் சுவாச கோளாறுகளுடன் தசை பலவீனம், உடல் சோர்வு போன்றவையும் ஏற்படலாம்.
  • பெண்களுக்கு சீரற்ற மாதவிடாய் மற்றும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவை ஏற்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

  • ஹார்மோன் சமநிலையின்மை:
    உணவு பழக்கங்கள், மன அழுத்தம், வாழ்வியல் மாற்றங்கள்  அல்லது நிலையற்ற  உறங்கும்  முறை போன்றவற்றினால் ஏற்படும் வளர்ச்சி ஹார்மோன் (ஜி.ஹெச்) அல்லது இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணியின்  (IGF) சமநிலையின்மை ஆகியவற்றால் இந்த நோய் ஏற்படக்கூடும்.
  • பிட்யூட்டரி ட்யூமர்ஸ் (கட்டிகள்):  
    அடனோமா/சுரப்பி வடிவப் புற்றுக்கட்டி எனப்படும் பிட்யூட்டரி ட்யூமர் (கட்டிகள்) விளைவாக அதிக அளவில் சுரக்கும் வளர்ச்சி ஹார்மோன்களினாலும் அக்ரோமெகலி நோய் உண்டாகக்கூடும்.
  • பிட்யூட்டரி அல்லாத ட்யூமர் (கட்டிகள்):
    மூளை, நுரையீரல், அட்ரீனல் சுரப்பிகள் அல்லது கணையம் போன்ற பிற முக்கிய உறுப்புகளில் வளரும் பிற கட்டிகளும் கூட சில நேரங்களில் வளர்ச்சி ஹார்மோன் (ஜி.ஹெச்) அதிகமாக சுரக்க வழிவகுக்கிறது.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

அக்ரோமெகலி நோய் படிப்படியான அறிகுறிகளை வெளிப்படுத்துவதால், பெரும்பாலும் இது கண்டறியப்படுவதில்லை, மேலும் இது பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. இந்த நோயை கண்டறிவதற்கான பல்வேறு வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • இரத்தப் பரிசோதனைகள்:
    ஜிஹெச் (வளர்ச்சி ஹார்மோன்) மற்றும் ஐ.ஜி.எஃப் - I (இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணி- I) ஆகியவை ஒரே நேரத்தில் அல்லாமல் சீரான இடைவெளியில் அளவிடப்படுகின்றன. வளர்ச்சி ஹார்மோன் அடக்குமுறை சோதனை உறுதியான நோய்கண்டறிதலை வழங்குகிறது.
  • இமேஜிங்:
    எலும்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை தெளிவாக பார்ப்பதற்கு எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) ஸ்கேன் மிகவும் பயனுள்ள ஒரு கருவியாகும். காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) அல்லது கம்ப்யூட்டரைஸ்டு டோமோகிராபி (சிடி) ஸ்கேன் போன்றவை கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவை கண்டறிய உதவுகிறது.

வளர்ச்சி ஹார்மோனின் அளவினை சீராக்குதல், கட்டியின் அளவைக் குறைத்தல், மற்ற அறிகுறிகளை கட்டுப்படுத்துதல் போன்றவையே இந்த சிகிச்சையின் நோக்கங்கள் ஆகும். இந்த நோய் தாக்கத்தின் காரணம், அறிகுறிகள், வயது மற்றும் வாழ்வியல் முறை ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும்.

  • மருந்துகள்:
    சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோனின் அடிப்படையில், உங்கள் நாளமில்லாச் சுரப்பியியல் மருத்துவர் (ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பிகள் மற்றும் தொடர்புடைய நோய்கள் ஆகியவற்றில் தனித்திறனுற்ற ஒரு மருத்துவர்) உங்கள் வளர்ச்சி ஹார்மோன் அல்லது இன்சுலின் போன்ற வளர்ச்சி காரணியின் அளவை சீர் செய்வதற்கான மருந்துகளை வழங்குவார். குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இதன் பக்கவிளைவுகள் ஆகும்.
  • அறுவை சிகிச்சை:
    கட்டிகள் உள்ள நோயாளிகளுக்கு இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. பிட்யூட்டரி சுரப்பியின் சேதம் மற்றும் ஹார்மோன் சுரப்பு குறைபாடு ஆகிய சிக்கல்கள் வரக்கூடும்.
  • கதிர்வீச்சு:
    சில நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அகற்றுதல் மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. இத்தகைய நிகழ்வுகளில், கதிர்வீச்சு சிகிச்சை மூலம் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு அளவுகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு பல மாதங்கள் தேவைப்படுகிறது. மேலும், கண் பார்வை குறைவு, மூளை சிதைவு போன்ற பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

அக்ரோமெகலி நோயின் தாக்கத்தை சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை செய்வதன் மூலம் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மற்றும் உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் போன்ற தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்த்திடலாம்.



மேற்கோள்கள்

  1. Sims-Williams HP, Rajapaksa K, Sinha S, Radatz M Walton L, Yianni J, Newell-Price J. Radiosurgery as primary management for acromegaly. Clin Endocrinol (Oxf). 2019 Jan;90(1):114-121. PMID: 30288782
  2. Hannon AM, Thompson CJ, Sherlock M. Diabetes in Patients With Acromegaly. Curr Diab Rep. 2017 Feb;17(2):8. PMID: 28150161
  3. Feelders RA, Hofland LJ, van Aken , Neggers SJ, Lamberts SW, de Herder WW, van der Lely AJ. Medical therapy of acromegaly: efficacy and safety of somatostatin analogues. Drugs. 2009 Nov 12;69(16):2207-26. PMID: 19852525
  4. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Acromegaly
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Acromegaly

அக்ரோமெகலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for அக்ரோமெகலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.